பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் அப்துல் ரஹ்மான் வழங்கி வந்த ஆதரவை மீட்டுக்கொள்வதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கு மூடா கட்சியின் ஒரே எம்.பி.யான சையத் சாதிக் தமது ஆதரவை வழங்கினார். இதன் மூலம் ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கு மூடா கட்சி உதவியது.
இந்நிலையில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை மீட்டுக்கொள்வது மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றாவது அணியாக தாம் செயல்படப் போவதாக இன்று மாலையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரான சையத் சாதிக் இதனை தெரிவித்தார்.
துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கில் அவர் எதிர்நோக்கியுள்ள 47 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படாமல், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதை ஆட்சேபிக்கும் வகையில் தமது தலைமையிலான மூடா கட்சி இந்த முடிவை எடுத்துள்ளதாக சையத் சாதிக் அறிவித்துள்ளார்.
இரண்டவாது மலேசிய திட்டத்தின் பாதி தவணைக்கான ஆய்வறிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தாக்கல் செய்வதற்கு நாளை திங்கட்கிழமை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கவிருக்கும் இவ்வேளையில் சையத் சாதிக் கின் இந்த திடீர் அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.








