சுபாங் ஜெயா, ஜூலை.15-
சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நேற்று நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்தில் தனது முன்னாள் காதலியை வெளிநாட்டு மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் காயம் விளைவித்த சம்பவம், அந்த பல்லைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
உள்ளூர் நாளேடு ஒன்று நடத்திய ஆய்வில், மாணவர்கள் தொடர்ந்து வகுப்புகளுக்குச் செல்வதைக் காண முடிந்தது. ஆனால், இப்படியொரு சம்பவம் நிகழ்ந்து இருப்பது அவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதைப் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
தன்னை ஏம்மி என்று மட்டுமே அடையாளம் கூறிக் கொண்ட கட்டடக் கலை மாணவி ஒருவர், தனது தோழியிடமிருந்து இந்தச் செய்தியை அறிய முடிந்ததாகக் குறிப்பிட்டார்.
அத்துடன் ஒரு வீடியோ கிளிப்பையும் தனக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று அந்த மாணவி தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் மாணவர்கள் இன்னமும் பதட்ட நிலையில் இருப்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட பொருட்களை மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்திற்குள் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று இதர மாணவர்கள் கேட்டுக் கொண்டனர்.
20 வயதுடைய தனது முன்னாள் காதலியைக் கத்தியால் குத்திக் காயம் விளைவித்த அந்த 21 வயது வெளிநாட்டு ஆடவர், தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.








