தடுப்புக் காவல்களில் கைதிகளை நிர்வாணமாக்கும் நடைமுறையை போலீசார் பின்பற்றவில்லை என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று பெசுட் நாடாளுமன்ற உறுப்பினர் சே முகமது சுல்கிஃப்லி ஜூசோ எழுப்பிய கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த அவர், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனைத்து அமலாக்க அமைப்புகளும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 20A-ஐ கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தச் சட்டத்தின் நான்காவது அட்டவணையில் கைது செய்யும் முறை, உடல் சோதனை நடத்தும் நடைமுறைகள் உள்ளிட்ட விதிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் சைஃபுடின் விளக்கமளித்துள்ளார்.
அண்மையில், சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி, கைது செய்யப்பட்டவர்களை போலீசார் தொடர்ந்து நிர்வாணமாக்கி சோதனை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சைஃபுடின் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.








