கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயரை ஒண்டிக்கு ஒண்டி குத்திக் கொள்ள சவால் விடுத்த பாஸ் கட்சியைச் சேர்ந்த பெண்டாங் எம்.பி. அவாங் ஹாஷிம் அவையில் பங்கேற்பதிலிருந்து 10 நாள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு நாள் இடை நீக்கம் செய்யப்பட்ட பாஸ் கட்சியைச் சேர்ந்த பெங்காலான் செப்பா எம்.பி அஹ்மாட் மார்ஸுக் ஷாரிக்கு அடுத்து 10 நாள் இடை நீக்கம் செய்யப்பட்ட அக்கட்சியைச் சேர்ந்த இரண்டாவது எம்.பியாக பெண்டாங் எம்.பி. அவாங் ஹாஷிம் திகழ்கிறார்.
13 ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தின் போது, பெண்டாங் எம்.பி. அவாங் ஹாஷிமிற்கும் ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயருக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் பெரும் சலசலப்பாக மாறியது.
இந்நிலையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒண்டிக்கு ஒண்டி குத்திக் கொள்வதற்கு ஆர்எஸ்என் ராயருக்கு, பெண்டாங் எம்.பி. அவாங் ஹாஷிம் சவால் விடுத்திருப்பதை வீடியோ மற்றும் ஆடியோ மூலமாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்று மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
பெண்டாங் எம்.பி. அவாங் ஹாஷிமின் செயல் உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது. பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் முன்னிலையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. எனவே அந்த எம்.பி. 10 நாள் இடை நீக்கம் செய்யப்படுவதாக டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் அறிவித்தார்.








