தாப்பா, ஜூன்.01-
குனுங் பத்து பூத்தே மலைப்பகுதியில் மலையேற்றத்தின் போது, காணாமல் போன 49 வயதான ஜாஸ்லிண்டா சலுடின் காட்டு விலங்குகளால் தாக்கப்பட்டிருக்கும் அல்லது பள்ளத்தில் விழுந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவாக இருப்பதாக தேடுதல் நடவடிக்கையை வழிநடத்தும் மலை வழிகாட்டி தெரிவித்துள்ளார்.
ஜாஸ்லிண்டாவின் முந்தைய மலையேற்ற அனுபவத்தைக் கருத்தில் கொண்டதன் அடிப்படையில், தாம் இதனைத் தெரிவிப்பதாக தற்போது தேடுதல் குழுவில் இடம் பெற்றுள்ள மலை வழிகாட்டியான முஸாஃபார் முஹமட் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டத்தில் மன உறுதியும், உடல் உறுதியும் மிகவும் முக்கியமான பங்காற்றும் நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவர் இந்தக் கடினமான சூழ்நிலையைச் சமாளித்து வரும் வாய்ப்பு இருப்பதாகவும் முஸாஃபார் முஹமட் குறிப்பிட்டுள்ளார்.
மலையேற்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஜாஸ்லிண்டாவிற்கு உயிர் பிழைப்புத் திறன்கள் இருப்பதால், அது அவருக்குப் பெரிய பலமாக இருக்கும் என்றும் முஸாஃபார் முஹமட் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 24-ஆம் தேதி மாயாமான ஜாஸ்லிண்டாவைத் தேடும் பணியில், நேற்றைய நிலவரப்படி, மீட்பு குழுவைச் சேர்ந்த 21 வீரர்கள் ஈடுபட்டு, தீவிர தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.








