நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் புக்கிட் பிந்தாங் பகுதியில் நடப்பதாகக் கூறப்படும் பாலியல் தொழிலுக்கு எதிராக அமலாக்கத் துறையினர் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னோ இயோ வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு அமலாக்க நடவடிக்கையின் போதும் அதிகாரிகள் உடலில் பொருத்தப்படும் கேமராக்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அதேவேளையில் பாலியல் தொழில் நடப்பதாகக் கண்டறியப்படும் வளாகங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், தொடர்புடையவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்றும் ஹன்னோ இயோ எச்சரித்துள்ளார்.
மேலும், சீருடை அணிந்த அமலாக்க அதிகாரிகள் களத்தில் தங்களது கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








