மலேசியாவுக்கு இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் எம்மெனுவல் மெக்ரோனுக்கு இன்று காலை கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் அரசு மரியாதையுடன் கூடிய கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.
காலை 9.30 மணியளவில் தனது மனைவி பிரிகிட் மெக்ரோனுடன் வருகை புரிந்த அவரை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும், துணைப் பிரதமர்கள் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி, ஃபாடில்லா யுசோஃப் ஆகியோரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மலேசியா மற்றும் பிரான்ஸ் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராயல் மலேய் ரெஜிமெனைச் சேர்ந்த 103 வீரர்கள் மற்றும் 3 அதிகாரிகள் அடங்கிய அணிவகுப்பு மரியாதையை எம்மெனுவல் மெக்ரோன் பார்வையிட்டார்.
அதேவேளையில், வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழக்கமாக புத்ராஜெயா அல்லது இஸ்தானா நெகாராவில் அளிக்கப்படும் வரவேற்புக்கு மாறாக, மலேசியாவின் சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க டத்தாரான் மெர்டேக்காவில் இந்நிகழ்ச்சியானது நடைபெற்றது.
கடந்த 2017-ஆம் ஆண்டு பிரான்ஸ் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு எம்மெனுவல் மெக்ரோன் மலேசியாவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும்.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, முக்கியக் கனிம வளங்கள், எரிசக்தி மாற்றம், விமானப் போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.








