கேபிள் திருட்டு காரணமாக இடிஎஸ் மின்சார ரயில் சேவையில் ஏற்படும் தாமதங்களால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என அலோர் ஸ்டார் நாடாளுமன்ற உறுப்பினர் அஃப்னான் ஹாமிமி தையிப் அஸாமுடின் கோரிக்கை விடுத்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது பேசிய அவர், ரயில் பயணிகள் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை தாமதத்தை எதிர்கொள்வதாகவும், சில நேரங்களில் ரயிலில் ஏறிய பிறகே தாமதம் குறித்து தெரிவிக்கப்படுவதாகவும் கூறினார்.
விமானச் சேவைகளைப் போலவே, ரயில் தாமதங்கள் குறித்தும் பயணிகளுக்கு குறுஞ்செய்தி அல்லது கேடிஎம்பி செயலி மூலம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
மேலும், கேபிள் திருட்டைத் தடுக்க ரயில் பாதைகளில் வேலிகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.








