வடகிழக்குப் பருவமழை மற்றும் அடுத்த ஆண்டு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் சூப்பர் எல் நினோ காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர மன்றமான டிபிகேஎல் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹான்னா இயோ இதனைத் தெரிவித்தார்.
டிபிகேஎல் மேற்கொண்ட வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளால், 2022ஆம் ஆண்டு 31ஆக இருந்த வெள்ள அபாயப் பகுதிகள் இவ்வாண்டு 14ஆகக் குறைந்துள்ளதாக அவர் கூறினார். இந்த எண்ணிக்கையை ஆண்டிறுதிக்குள் 10ஆகக் குறைப்பதே இலக்கு என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மழை பெய்யும்போதெல்லாம் கோலாலம்பூரின் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ள டிபிகேஎல் கிளை அலுவலகங்கள், மாநகர மேயருக்கு உடனுக்குடன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெள்ள அபாயப் பகுதிகளில் விரைவான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.








