கிழக்குக் கரையோர மாநிலங்களுக்கான ரயில் சேவையான இசிஆர்எல்லில் வழங்கப்படும் கட்டணச் சலுகைகளை, குறைந்த வருமானம் பெறும் பி40 மக்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது பேசிய செத்தியூ நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹாரிஸுகிர்நாயின் துல் காடீர், குறிப்பாக எஸ்டிஆர் உதவித்தொகை பெறுவோர் மற்றும் இகாசே திட்டத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கும் கட்டணத் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும் என்றார்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 விழுக்காடு கட்டணச் சலுகையும், மாணவர்களுக்கு 40 விழுக்காடு சலுகையும் வழங்கப்படுவதைச் சுட்டிக் காட்டிய அவர், பி40 மக்களுக்கும் இதேபோன்ற சலுகை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், குடும்பப் பயணக் கட்டணச் சலுகை எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
கோம்பாக்கிலிருந்து திரெங்கானு, செத்தியூவுக்கு ஒரு வழிப் பயணக் கட்டணம் ஒருவருக்கு 107 ரிங்கிட்டாக இருப்பதால், பெரிய குடும்பங்களுக்கு இது கூடுதல் சுமையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








