ஈப்போ ஜெலப்பாங்–அம்பாங் சாலையில் இன்று அதிகாலை 12 மோட்டார் சைக்கிள்களும் 3 கார்களும் மோதிய விபத்தில் மூன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒன்பது பேர் காயமடைந்தனர்.
அதிகாலை 3.35 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் நஜிப் ஹம்சா தெரிவித்தார்.
மேருவிலிருந்து தம்பூன் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
19 மற்றும் 20 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 19 வயதுடைய மற்றொருவர் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
19 முதல் 25 வயதுக்குட்பட்ட மேலும் ஒன்பது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று கார் ஓட்டுநர்களுக்கும் காயம் ஏற்படவில்லை என்று அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.








