நாட்டில் சட்டவிரோத கிளினிக்குகள் மற்றும் பதிவு செய்யப்படாத மருந்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுவதால், சுகாதார அதிகாரிகள் கடுமையான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மலேசிய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சட்டவிரோத கிளினிக்குகளை மூடுவது மட்டுமே போதாது என்றும், சம்பந்தப்பட்டவர்கள் வேறு இடங்களில் மீண்டும் செயல்படுவதைத் தடுக்க தொடர் கண்காணிப்பு அவசியம் என்றும் சங்கத் தலைவர் டாக்டர் எல். சிவனேசன் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய இடங்களில் ஒருங்கிணைந்த சோதனைகளுடன், ஏற்கெனவே சட்டவிரோதமாக செயல்பட்டதாக கண்டறியப்பட்ட இடங்களிலும் தொடர்ந்து சோதனைகள் நடத்த வேண்டும் என அவர் கூறினார்.
மேலும், பதிவு செய்யப்படாத மருந்துகள் மலேசியாவுக்குள் எவ்வாறு கொண்டு வரப்படுகின்றன என்பதைக் கண்டறிந்து, அவற்றை விநியோகிக்க உதவுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.








