கோலாலம்பூர், ஜனவரி.08-
பொது சுகாதாரத்திற்கான 2024 புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம், பிரிவு 852, கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் முழுமையான அமலாக்கம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. மலேசிய சுகாதார அமைச்சு இந்தச் சட்டத்தை வலுப்படுத்த 'நுரையீரல் பாதுகாப்பு நடவடிக்கை' என்ற சிறப்பு அமலாக்க நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இது முக்கியமாக புகைபிடித்தல் பொருட்கள், மின்-சிகரெட் மற்றும் வேப் (Vape) ஆகியவற்றின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையில் கவனம் செலுத்தி, இளைய தலைமுறையினரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம்ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரையிலான காலப் பகுதியில், நாடு முழுவதும் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 வளாகங்கள் சோதனையிடப்பட்டு, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 839 கம்பாவுன்கள் விதிக்கப்பட்டுள்ளன.
இதில் தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடித்ததற்காக ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 568 பேருக்கும், புகைபிடித்தல் பொருட்களை வாங்கிய அல்லது பயன்படுத்திய சிறுவர்களுக்கும், விதிமுறைகளை மீறிய கட்டிட உரிமையாளர்களுக்கும் அபராதங்கள் விதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் இதுவரை 58 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு, மொத்தம் 3 லட்சத்து 94 ஆயிரத்து 700 ரிங்கிட் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அண்மைய நடவடிக்கையாக, 'Dol’s Podcast' என்ற யூடியூப் தளம் வழியாக புகைபிடித்தல் பொருட்களை விளம்பரப்படுத்தியதற்காக, பிரபல கலைஞர் Shuib அல்லது ஷமிரா பின் முகமது சுய்ப் மீது புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதற்காக அவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது அபராதம் செலுத்தத் தவறினால் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. சட்ட அமலாக்கம் என்பது சுகாதார அமைச்சின் கடைசி முயற்சியாகும் என்றும், பொதுமக்கள் இந்தச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி நோயற்ற வாழ்வை உறுதிச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக அது தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.








