கடந்த அக்டோபர் 7 ஆம் நாள் கிள்ளான் இலட்சுமணா மண்டபத்தில் நடந்தது அரசு சாரா அமைப்பு நடத்தியக் கூட்டமே தவிர அது அரசியல் கட்சி தொடங்குவதற்கான கூட்டம் கிடையாது என ஓம்ஸ் அறக்கட்டளையின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டிற்காக “ விடியலை நோக்கி நாம் “ எனும் தலைப்பில் மலேசியா இந்தியர் ஒருங்கிணைப்பு இயக்கம் ஏற்பாடு செய்த அந்தக் கூட்டத்தில் தாம் தலைமையேற்றது குறித்து பல தவறானக் கருத்துகள் பரவி வருவதாகவும், அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கிலேயே இந்த விளக்கத்தை அளிப்பதாகவும் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார். .
70 வயதை எட்டும் தாம் அரசியல் கட்சியைத் தொடங்கி ஒன்றும் செய்யப்போவதில்லை எனக் குறிப்பிட்ட ஓம்ஸ் தியாகராஜன் , அரசு சாரா அமைப்பிலேயே இருந்து இந்தியர்களுக்கான பல மேம்பாட்டு நடவடிக்கைகளைச் செய்வதில்தான் தாம் ஆர்வமாக இருப்பதாக தெளிவுபடுத்தினார்.
மேலும், முந்தையச் சந்திப்புக் கூட்டத்தைத் தொடர்புப் படுத்தி பிரதமர் துறை அலுவலகம் வெளியிட்ட கடிதம் குறித்து வினவப்பட்டபோது, பிரதமருக்கு அந்தச் சந்திப்புக் கூட்டம் குறித்து முறையான விளக்கம் கொடுக்கப்படாததால் நேர்ந்த குழப்பமே அன்றி, தனிப்பட்ட முறையில் தாம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம்மைத் தொடர்பு கொண்டு பேசி விட்டதாகவும் ஓம்ஸ் தியாகராஜன் தெளிவுபடுத்தினார்.
கிள்ளானில் நடந்த முழு கூட்டமும் தொடக்கம் முதல் இறுதி வரை பதிவு செய்யப்பட்டு இருப்பதால், உண்மை நிலவரம் தெரியாதவர்களும் சில பொறுப்பற்றத் தரப்பினரும் தமது தலைமையில் புதிய கட்சி உருவாகிறது எனும் பொய்யானத் தகவலைப் பரப்பி இருப்பதாக தியாகராஜன் விளக்கம் அளித்தார்
இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கே.பி. சாமி உட்பட இதர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.








