கோலாலம்பூர், அக்டோபர்.05-
மலேசியாவில் நடைபெறவுள்ள 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரப்பின் வருகை குறித்து எழுந்த சர்ச்சைக்குத் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி விளக்கம் அளித்துள்ளார். டிரம்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பு, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தனிப்பட்ட முடிவல்ல என்றும், 10 ஆசியான் நாடுகளின் தலைவர்களும் ஒருமனதாக எடுத்த கூட்டு முடிவு என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
ஆசியான் அமைப்பின் தற்போதையத் தலைவராக மலேசியா, அதன் கூட்டாளிகளான அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம். இருப்பினும், இந்தக் கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டாலும், காஸா, பாலஸ்தீனம் விவகாரத்தில் மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஒரு போதும் மாற்றாது என்று ஸாஹிட் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆசியான் தலைவர்களின் ஒருமித்த முடிவை மலேசியா மதிக்கும் அதே வேளையில், பாலஸ்தீன மக்களுக்கான உரிமைப் போராட்டத்தைத் தொடரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








