கோலாலம்பூர், ஜனவரி.19-
வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல், ROD எனப்படும் Rapid On-Demand வேன் பொது போக்குவரத்து, மக்களுக்கான போக்குவரத்து சேவைகளுக்கு 2 ரிங்கிட் நிலையான கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள 1 ரிங்கிட் விளம்பரக் காலக் கட்டணம் முடிவுக்கு வருகிறது.
இந்த 2 ரிங்கிட் கட்டணம் My50, Rapid Kota, Rapid Kembara மற்றும் Rapid Keluarga ஆகிய பயண அட்டை வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும்.
2027-ஆம் ஆண்டின் இறுதி முதல் 2028-ஆம் ஆண்டுக்குள் 300 புதிய மின்சார வேன்களை அறிமுகப்படுத்த ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவையை நிர்வகித்து வரும் பிரசரானா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் 130 வேன்கள் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் 170 வேன்கள் பினாங்கிலும் இயக்கப்படும்.
தற்போது கிள்ளான் பள்ளத்தாக்கில் 71 சேவைகள், பினாங்கில் 11 சேவைகள் என வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கில் கூடுதலாக 22 மண்டலங்களும், பினாங்கில் 23 மண்டலங்களும் சேர்க்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை மேம்படுத்தவும் பிரசரானா திட்டமிட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.








