கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-
13 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்மொழிந்துள்ள இபிஃஎப் பென்சன் திட்டம், சந்தாதாரர்கள், தங்களின் அந்திம காலச் சேமிப்புப் பணத்தை மீட்கும் அடிப்படை உரிமையை எந்த வகையிலும் பாதிக்கச் செய்யாது என்று துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.
இபிஃஎப் சந்தாதாரர்கள், பணி ஓய்வு பெற்ற பின்னர் அவர்களுக்கு மாதாந்திர அடிப்படையில் இபிஃஎப் ஓய்வூதியம் வழங்கும் திட்டமானது, அதற்கான அமலாக்கத் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இபிஃஎப்பின் புதிய சந்தாதார்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்படுமே தவிர நடப்பில் உள்ள சந்தாதாரர்களுக்கு அல்ல என்பதையும் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெளிவுபடுத்தினார்.
எனினும் இபிஃஎப்பின் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு நடப்பில் உள்ள சந்தாதாரர்கள் ஆர்வம் கொள்வார்களேயானால், அது அவர்களின் விருப்புரிமையைப் பொறுத்தது. அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று லிம் ஹுய் யிங் விளக்கினார்.








