நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள இந்து ஆலயங்களின் பிரச்னையை கண்டறிபதற்கும், நில விவகாரம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கும் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலையில் ஒரு நல்லிணக்க கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
மலேசிய இந்து சங்கத்தின் நெகிரி செம்பிலான் பேரவையின் ஏற்பாட்டில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் தலைமையில் சிரம்பான், தாமான் துவாங்கு ஜப்பார், ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மாநிலத்தில் உள்ள ஆலயங்களில் 50 க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, தங்கள் பிரச்னையையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் சிவநெறிச் செல்வர் தங்க கணேசன் கலந்து கொண்டு தெளிவுரை வழங்கினார். நெகிரி செம்பிலான் இந்து சங்கத்தின் தலைவர் சிவஸ்ரீ டாக்டர் A.L. கோபி சிவச்சாரியார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஆலய விவகாரங்கள் குறித்து அலசிய ஆராயப்பட்டதாக நிகழ்விற்கு தலைமையேற்ற ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
ஆலய நில விவகாரங்களை தீர்க்கும் முயற்சியில் ஆலய நிர்வாகத்தினருக்கு மலேசிய இந்து சங்கம் தோள்கொடுக்க தயாராக இருப்பதாக அதன் தலைவர் சிவநெறிச் செல்வர் தங்க கணேசன் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நில விவகாரம் உட்பட இந்து ஆலயங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை தீர்வு காண்பதற்கு அவற்றின் நிர்வாகங்கள் மாநில இந்து சங்கத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மாநில இந்து சங்கத் தலைவர் சிவஸ்ரீ டாக்டர் A.L. கோபி சிவச்சாரியார் தெரிவித்தார்.
வழக்கறிஞர்களும், ஆலய நிர்வாகத்தினரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அதிகமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது என்று பத்து லீமா, ஜாலான் தம்பின் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் பொறுப்பாளர் கணேஷ் கண்ணையா தெரிவித்தார்.
ஆலய நில விவகாரம் தொடர்பாக முக்கிய தெளிவுரைகளை பெறுவதற்கு இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அந்த வகையில் இதனை ஏற்பாடு செய்த நெகிரி செம்பிலான் இந்து சங்கத்திற்கும், ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கிம்மாஸ், பெல்டாவை சேர்ந்த அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய செயலாளர் சிவராஜா முத்துசாமி தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்வானது நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள இந்து ஆலயங்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு ஒரு நிலையான தீர்வை எட்டுவதற்கான மிக முக்கியமான தொடக்கமாக அமைந்தது. ஆலயப் பொறுப்பாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் யாவும் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, மாநில அரசின் ஒத்துழைப்போடும் மலேசிய இந்து சங்கத்தின் வழிகாட்டலோடும் ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.










