புத்ராஜெயா, செப்டம்பர்.13-
நாட்டின் நுழைவாயில்களில் செட்டிங் முகப்பிடங்களை ஏற்படுத்தி, அந்நிய நாட்டவர்கள், மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய அனுமதிப்பதற்கு அமலாக்க அதிகாரிகள் மாதம் தோறும் சராசரி தலா 50 ஆயிரம் ரிங்கிட் வரை லஞ்சமாகப் பெற்று வந்துள்ளனர் என்று சந்தேகிக்கப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று அம்பலப்படுத்தியுள்ளது.
மலேசியாவிற்குள் வெற்றிகரமாக நுழையும் ஒவ்வொரு அந்நிய நாட்டவரிடம் தலா 1,800 ரிங்கிட் முதல் 2,500 ரிங்கிட் வரையில் இவர்கள் லஞ்சமாகப் பெற்று வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
இவ்வாறு பெறப்பட்ட லஞ்சம், ரொக்கப் பணமாகவும், அவற்றைத் தங்கள் பினாமிகள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
தங்களின் கணக்குப்படி அந்நியப் பிரஜைகளை மலேசியாவிற்குள் நுழைய அனுமதிப்பது மூலம் ஒவ்வோர் அமலாக்க அதிகாரியும் மாதம் தோறும் 10 ஆயிரம் ரிங்கிட் முதல் 50 ஆயிரம் ரிங்கிட் வரை லஞ்சம் பெற்று வந்துள்ளனர்.
விமான நிலையத்தில் வந்திறங்கும் அந்நிய நாட்டவர்கள், எவ்வித சோதனை மற்றும் சிக்கலின்றி குடிநுழைவுத்துறையைத் தாண்டி செல்ல, எந்த முகப்பிடத்திற்கு, எந்த நேரத்தில் செல்ல வேண்டும், மற்றும் அந்நிய நாட்டவர்களின் கடப்பிதழ் எண் முதலிய விவரங்கள் முன்கூட்டியே ஏஜெண்டுகள் மூலம் சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டவரிடமும், செட்டிங் முகப்பிடத்தில் உள்ள அதிகாரிகளிடம் தெரியப்படுத்தப்படுகிறது என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
நாட்டின் பிரதான நுழைவாயில்களான விமான நிலையங்களில் மலேசிய எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சியின் ஒத்துழைப்புடன் எஸ்பிஆர்எம் இதனைக் கண்டுபிடித்துள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஸாம் பாக்கி இதனைத் தெரிவித்தார்.








