கோலாலம்பூர், ஜூலை.12-
கோலாலம்பூர், புக்கிட் துங்குவில் உள்ள ஜாலான் கல்லாகெர் சுற்றுப்புறப் பகுதியின் தூய்மை நிலையை கண்டறிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று சுமார் 3.2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று பார்வையிட்டார்.
இந்த திடீர் சோதனையின் போது சாலையோரங்களில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் வடிகால்களில் அடைப்பட்டு கிடக்கும் கழிவுப் பொருட்களையும் பார்வையிட்டு, அவை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை மாமன்னர் வலியுறுத்தியதாக சுல்தான் இப்ராஹிம் முகநூலில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதி சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிச் செய்ய ஊராட்சிமன்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தினார்.
சாலையோரங்களில் குப்பைக் கொட்டுவது ஏடிஸ் கொசுக்களின் இனப் பெருக்கம் செய்யும் இடமாக மட்டுமல்லாமல், சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று மாமன்னர் நினைவுறுத்தினார்.
அதே வேளையில் சாலையில் தொங்கும் பெரிய மரக் கிளைகளையும் மாமன்னர் கண்காணித்தார். இது பொதுமக்களுக்கு, குறிப்பாக இரவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மன்னர் குறிப்பிட்டார்.








