உலு சிலாங்கூர், டிசம்பர்.05-
உலு சிலாங்கூரில் நேற்று பொருட்கள் விநியோகம் செய்யும் டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக நம்பப்படும் 54 வயது ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று புக்கிட் செந்தோசாவிலிருந்து கோலாலம்பூரை நோக்கித் தனது வேனில் சென்று கொண்டிருந்த 26 வயது டெலிவரி ஊழியரின் வாகனத்தை நிறுத்திய ஆடவர் ஒருவர், தன்னை மோதி விபத்திற்குள்ளாக்க முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அதன் பின்னர், திடீரென அந்த ஊழியரை நோக்கி, துப்பாக்கி போன்ற ஆயுதத்தை நீட்டிய அந்த ஆடவர், அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக உலு சிலாங்கூர் போலீஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த ஆடவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மைக்ரோ என்ற எழுதப்பட்டிருந்த ஆயுதம் ஒன்றையும், இன்னும் சில பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சம்பவமானது குற்றவியல் சட்டம் பிரிவு 506-இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.








