ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.14-
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே, பினாங்கு மாநிலத்திற்கு வருகை புரிவதைத் தாங்கள் வரவேற்பதாகவும், ஆனால், அவரின் வருகையானது பினாங்கு மக்களைப் பிளவுப்படுத்தக்கூடியக் கலகத்தை விளைவிக்கும் வருகையாக இருக்கக்கூடாது என்று மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநிலத்தில் நாசி கண்டாரை உண்பதற்காகத்தான் அக்மால் பினாங்கிற்கு வருகிறார் என்றால் அவரைத் தாங்கள் வரவேற்பதாக சோவ் கோன் யோவ் குறிப்பிட்டார்.
அதே வேளையில் ஓர் அமைதியான மாநிலமாக விளங்கி வரும் பினாங்கில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவரின் வருகை இருக்கக்கூடாது என்று சோவ் கோன் யோவ் நினைவுறுத்தினார்.
கெப்பாளா பத்தாஸில் வணிகர் ஒருவர் தேசியக் கொடியைத் தலைகீழாகக் கட்டியதற்காகப் பெருங்கூட்டத்துடன் ஆட்சேப நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்த அக்மால், தற்போது நாசி கண்டாரை உண்பதற்காகத்தான் பினாங்கிற்கு வருவதாக அறிவித்து இருப்பது தொடர்பில் முதலமைச்சர் சோவ் கோன் யோவ் கருத்துரைத்தார்.








