May 5, 2026
Thisaigal NewsYouTube
சட்டம் 872-இன் கீழ் 'கிக்' தொழிலாளர் பாதுகாப்பை அரசாங்கம் வலுப்படுத்துகிறது – ரமணன்
தற்போதைய செய்திகள்

சட்டம் 872-இன் கீழ் 'கிக்' தொழிலாளர் பாதுகாப்பை அரசாங்கம் வலுப்படுத்துகிறது – ரமணன்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.10-

2025 ஆம் ஆண்டு 'கிக்' (Gig) தொழிலாளர் சட்டத்தின் 872 ஆவது பிரிவு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சட்டம் கிக் தொழிலாளர்களின் பணி நிலையை அங்கீகரிப்பதோடு, அவர்களின் நலனைப் பாதுகாப்பதற்கான தெளிவான சட்டக் கட்டமைப்பை வழங்கும்.

நாட்டின் மொத்த உழைப்புச் சக்தியில் 21.8 விழுக்காடாக இருக்கும் சுமார் 3.45 மில்லியன் முறைசாரா துறைத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான அமைச்சின் உறுதிப்பாட்டை இந்நடவடிக்கை காட்டுவதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

1969-ஆம் ஆண்டு தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம், 'லிண்டுங் (LINDUNG) 24 மணிநேரத் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இத்திட்டம் வேலை நேரத்திற்கு அப்பாற்பட்டு ஏற்படும் விபத்துகள் உட்பட, வேலைக்காலம் முழுவதும் தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது. "யாரும் கைவிடப்படக் கூடாது என்ற கொள்கையே நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு கொள்கைகளுக்கு அடிப்படையாகும்.

நாட்டின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி என்பது தொழிலாளர்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது" என்று அவர் இன்று மக்களவையில் மாமன்னரின் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசுகையில் டத்தோ ஶ்ரீ ரமணன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News