கோல லங்காட், ஜனவரி.03-
அண்மையில் WCE எனப்படும் மேற்குக் கரையோர நெடுஞ்சாலையின் 8.3 ஆவது கிலோமீட்டரில் கோல லங்காட், பந்திங், ஶ்ரீ சீடிங் பாலத்தில் நின்று கொண்டு பழுதடைந்த வாகனத்தின் மீது கற்களைத் தூக்கி எறிந்து ஆபத்தான செயலில் ஈடுபட்ட நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஜனவரி முதல் தேதி புத்தாண்டு அன்று பிற்பகல் 3.22 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் நெடுஞ்சாலை ரோந்துப் பணிக் குழுவினர் புகார் அளித்து இருப்பதாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முஹமட் அக்மைரிசால் ரட்ஸி தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தினால் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனம் ஒன்று கடும் சேதமுற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அந்தச் சாலையைக் கடந்து சென்றவர்கள் யாரும் காயம் அடையவில்லை என்ற போதிலும் பாலத்தின் மீது நின்று கொண்டு கற்களை எறிவது வாகனமோட்டிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலைத் தரக்கூடியதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக குற்றவியல் சட்டம் 427 பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை ஒன்று திறக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.








