ஷா ஆலாம், ஆகஸ்ட்.28-
கடந்த செவ்வாய்க்கிழமை பூச்சோங்கில் மூன்று மாடிகளைக் கொண்ட ஓர் இன்னிசை கேளிக்கை மையத்தில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான ரிங்கிட்டைக் கொடுத்து சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மனமகிழ்வு உபசரணைப் பணியில் அந்நிய நாட்டுப் பெண்கள் ஈடுபட்டு வருவதாகக் கிடைக்கப் பெற்றத் தகவலில் அடிப்படையில் அந்த கேளிக்கை மையத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவு தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.
புத்ராஜெயா தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இரவு 9.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில், கேளிக்கை மையத்தில் இருந்த 187 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் 65 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த 16 ஆண்களும் அடங்குவர். இதர பெண்கள் வியட்நாம், இந்தோனேசியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அவர் விளக்கினார்.








