பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் அறிக்கை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சமூக ஆர்வலர் அருண் துரைசாமி சமர்ப்பித்த பிரதிநிதித்துவ மனுவைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் நிராகரித்துள்ளது.
இதையடுத்து, இவ்வழக்கின் விசாரணை 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கும் என்று பினாங்கு,ஜாவி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. விசாரணையின்போது அரசுத் தரப்பு சுமார் ஏழு சாட்சிகளை அழைக்கவுள்ளது.
56 வயதான அருண் துரைசாமி என்ற ஆறுமுகம் துரைசாமி, 2025ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி பிற்பகல் 3.45 மணிக்கு, பினாங்கு, பத்து காவானில் உள்ள பேரங்காடி ஒன்றில் இருந்து, தமது இன்ஸ்டாகிராம் கணக்கில் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
மத விழா ஒன்றைக் கேலி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று உள்ளூர் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் தொடர்பான சர்ச்சையில், சமயப் போதகர் ஸம்ரி வினோத் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்து அமைப்பு ஒன்று வீதிப் போராட்டம் நடத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க நடப்பு குற்றவியல் சட்டம் வகை செய்கிறது.








