Sep 8, 2026
Thisaigal NewsYouTube
கோபாலா குரு மரணம்: குடும்பத்தினரின் அப்பீல் மனுவை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
தற்போதைய செய்திகள்

கோபாலா குரு மரணம்: குடும்பத்தினரின் அப்பீல் மனுவை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

Share:

கோலாலம்பூரில் மதுபான விடுதி உரிமையாளரான மறைந்த கே. கோபாலா குரு மரணம் தொடர்பாக, போலீஸ் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், மேல்முறையீடு செய்ய முன்வைத்த மனுவை, கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் அஹ்மாட் தெரிருடின் சாலே மற்றும் கோலின் லாரன்ஸ் செகுவேரா ஆகியோர் வழங்கிய பெரும்பான்மை தீர்ப்பில், உச்சநீதிமன்றம் மேலும் விசாரிக்க வேண்டிய சட்டத் தேவைகளை குடும்பத்தினர் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும், இதில் அரசியலமைப்பு தொடர்பான எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அஹ்மாட் தெரிருடின் கூறினார்.

எனினும், நீதிபதி சே ருஸிமா கஸாலி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி, போலீஸ் அதிகாரி அம்ரான் சாலி, கோபாலாவை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதாகவும், பின்னர் அவரை மற்ற போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து அழைத்துச் சென்று, அவரது உடலை மலைப்பகுதியில் இருந்து கீழே தள்ளியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

கோபாலாவின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இது தொடர்பாக அவரது மனைவி வீ. சத்தியவாணி மற்றும் தாயார் வீ. பாஞ்சாலை ஆகியோர் அரசாங்கம் மற்றும் போலீசாருக்கு எதிராக தொடர்ந்த வழக்கை கடந்த 2024-ஆம் ஆண்டு புத்ராஜெயா உயர்நீதிமன்றம் காலதாமதம் காரணமாக தள்ளுபடி செய்தது. பின்னர் அந்தத் தீர்ப்பை அப்பீல் நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், தற்போது கூட்டரசு நீதிமன்றமும் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்துள்ளது.

Related News