Sep 8, 2026
Thisaigal NewsYouTube
முதலீட்டில் புதிய உச்சத்தை எட்டுகிறது சிலாங்கூர்: 100 பில்லியனைத் தாண்டும் என மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நம்பிக்கை
தற்போதைய செய்திகள்

முதலீட்டில் புதிய உச்சத்தை எட்டுகிறது சிலாங்கூர்: 100 பில்லியனைத் தாண்டும் என மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நம்பிக்கை

Share:

சிலாங்கூரில் இந்த ஆண்டு பதிவாகும் முதலீட்டு மதிப்பு 100 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தற்போதைய முதலீட்டு வளர்ச்சி சாதகமாக இருப்பதால் இந்த இலக்கை எட்ட முடியும் என மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டின் முதல் பாதியிலேயே சிலாங்கூர் சுமார் 70 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இவ்வாண்டிற்கான இலக்காக 80 பில்லியன் ரிங்கிட் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய வேகத்தில் முதலீடுகள் தொடர்ந்தால் 100 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான புதிய சாதனையைப் படைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரான்ஸ், ஜெர்மனி, சவுதி அரேபியா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்ட முதலீட்டு பயணங்களும், சிலாங்கூரின் வலுவான முதலீட்டு செயல்பாட்டுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அமிருடின் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே புதிய தொழில்துறை பகுதிகளின் வளர்ச்சி, குறிப்பாக என்சிடி (NCT) அறிவுசார் தொழிற்பேட்டை மற்றும் கேரித்தீவு பகுதியில் உருவாக்கப்படவுள்ள மூன்றாவது துறைமுகம் ஆகியவை எதிர்கால முதலீடுகளை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், ஈஸ்ட் கோஸ்ட் ரேல் லிங்க் திட்டம் திட்டமிட்டபடி இந்த ஆண்டின் இறுதியில் செயல்படத் தொடங்கினால், முதலீட்டு நடவடிக்கைகளுக்கு மேலும் சாதகமான சூழல் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்சிடி அறிவுசார் தொழிற்பேட்டை பகுதியில் அனுமதி கிடைத்ததும் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை உள்நாட்டு நிறுவனங்களாக இருக்கும் என்றும் அமிருடின் தெரிவித்துள்ளார்.

சுமார் 368.26 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்பூங்காவின் மொத்த வளர்ச்சி மதிப்பு 10.2 பில்லியன் ரிங்கிட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தெற்கு சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டுப் பகுதியின் ஒரு பகுதியாகவும், முதல் சிலாங்கூர் திட்டமான RS-1-ல் இடம் பெற்றுள்ள முக்கியத் திட்டமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News