தாபோங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து நடைபெற்று வரும் விசாரணையில், முன்னாள் அமைச்சர் ஒருவர் தடுப்புக் காவல் உத்தரவுக்காக புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
60 வயதுகளில் உள்ள அந்த முன்னாள் அமைச்சர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆரஞ்சு நிற தடுப்புக் காவல் உடையில், இன்று காலை 10.25 மணியளவில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில், எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் அவர் தமது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காகச் சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் தாபோங் ஹாஜி தொடர்பான ஹோட்டல் குத்தகை விவகாரம் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக அவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தாபோங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை அறிக்கையானது கடந்த ஜூலை 29ஆம் தேதி பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது.
கடந்த 2014 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தாபோங் ஹாஜி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகளை ஆர்சிஐ அறிக்கை சுட்டிக்காட்டியதுடன், தடயவியல் தணிக்கை தேவைப்படும் சில சர்ச்சைக்குரிய முதலீடுகளையும் பட்டியலிட்டிருந்தது.
மேலும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மற்றும் தகவல்களை மறைத்தல் தொடர்பான விவகாரங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








