Sep 2, 2026
Thisaigal NewsYouTube
தபோங் ஹாஜி ஆர்.சி.ஐ விசாரணை: பலர் மீது அடுத்த இரு நாட்களில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தபோங் ஹாஜி ஆர்.சி.ஐ விசாரணை: பலர் மீது அடுத்த இரு நாட்களில் குற்றச்சாட்டு

Share:

தபோங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் ஆர்.சி.ஐ அறிக்கை குறித்து எஸ்.பி.ஆர்.எம் நடத்தி வரும் விசாரணையில் இதுவரையில் 18 பேர் கைது செய்யப்பட்டதுடன் 245 சாட்சிகள் அழைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பலர் மீது அடுத்த இரண்டு நாட்களில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளன என்று எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் தெரிவித்துள்ளார்.

தபோங் ஹாஜியின் முதலீடுகளுடன் தொடர்புடைய டி.ஹெச் மரைன், டி.ஹெச் ஆலம் மற்றும் டி.ஹெச் ஆலம் மேனேஜ்மென்ட் நிறுவனங்களில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி முறைகேடு இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.

இந்த மூன்று முதலீடுகளிலும் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் தொகை மொத்தம் 33 கோடியே 42 லட்சம் ரிங்கிட் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலாக, கட்டுமான நிறுவனமான புத்ராஜாயா பெர்தானா பெர்ஹாட் நிறுவனத்தில் தபோங் ஹாஜி வைத்திருந்த 30 விழுக்காடு பங்குகள் தொடர்பிலும் ஊழல் குற்றச்சாட்டு இடம்பெறும் என அப்துல் ஹலிம் அமான் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் கோலாலம்பூர் மற்றும் ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்படுவார்கள் என்று புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் தெரிவித்தார்.

எனினும், வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னரே குற்றச்சாட்டுகளின் முழு விவரங்களையும் தெரிவிக்க முடியும் என்றும் டத்தோ ஸ்ரீ ஹலிம் அமான் குறிப்பிட்டார்.

Related News