Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தீபாவளி விடுமுறையில் 2.1 மில்லியன் வாகனங்கள் சாலையைப் பயன்படுத்தக்கூடும்
தற்போதைய செய்திகள்

தீபாவளி விடுமுறையில் 2.1 மில்லியன் வாகனங்கள் சாலையைப் பயன்படுத்தக்கூடும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.09-

வரும் தீபாவளி விடுமுறையில் நாட்டில் உள்ள சாலைகளை 2.1 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி திருநாள் அக்டோபர் 20 ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி தீபாவளி பொது விடுமுறை அனுசரிக்கப்படுவதால் வழக்கத்திற்கு மாறாக அதிகமான வாகனங்கள் சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையத்தின் போக்குவரத்துப் பிரிவு கணித்துள்ளது.

சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, விடுமுறை காலத்துடன் சேர்த்து அக்டோபர் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை ஓப்ஸ் லஞ்சார் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் கமிஷனர் ஆணையர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.

இந்த காலக் கட்டத்தில் சுமார் 2.1 மில்லியன் வாகனங்கள் சாலையைப் பயன்படுத்தும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், இந்த ஓப்ஸ் லஞ்சார் சோதனை நடவடிக்கையில் சுமார் 500 போலீஸ்காரர்கள் பணிக்கு ஈடுபடுத்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய நெடுஞ்சாலைகள், நகர மையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை முக்கிய இலக்காகக் கொண்டு போலீசார் தீவிர கவனம் செலுத்துவர் என்று இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களுடன் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை போலீசாரின் துப்பாக்கிச் சுடும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி இதனைத் தெரிவித்தார்.

தீபாவளி காலக் கட்டத்தில் நெடுஞ்சாலைகள் உட்பட பிரதான சாலைகளில் வர்த்தக வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து இன்னும் தீர்க்கமாகத் தெரியவில்லை. போக்குவரத்து அமைச்சின் அறிவிப்புக்காகத் தாங்கள் காத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News