கோலாலம்பூர், டிசம்பர்.17-
இரண்டு கூட்டரசுப் பிரதேசங்கள் உட்பட, 7 மாநிலங்களில் நாளை வியாழக்கிழமை வரை கனமழை தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பஹாங், திரங்கானு, ஜோகூர், கிளந்தான், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களில் நாளை வரை கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக குவாந்தான், பெக்கான் மற்றும் ரோம்பினில் கூடுதல் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி நிலவரப்படி, வெள்ளம் காரணமாக, குவாந்தானில் 1,921 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
இதனிடையே, மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ பக்கங்களில், வானிலை நிலவரங்களைத் தெரிந்து கொள்ளும் பொதுமக்கள், அதன்படி தங்களது செயல்பாடுகளைப் பாதுகாப்பான முறையில் அமைத்துக் கொள்ளுமாறு மெட்மலேசியா வலியுறுத்தியுள்ளது.








