கோலாலம்பூர், ஜனவரி.20-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேசத் துரோகக் கருத்துக்களை வெளியிட்ட குற்றத்திற்காக தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி, கிஜால் சட்டமன்ற உறுப்பினர் ரஸாலி இட்ரிஸ் அப்பீல் செய்துள்ளார்.
இவ்வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதிருப்தி அடைந்த ரஸாலி இட்ரிஸ், கடந்த வாரம் தனது அப்பீல் மனுவைத் தாக்கல் செய்ததாக, அவரது வழக்கறிஞர் அவாங் அர்மாடாஜெயா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 5-ஆம் தேதி, இவ்வழக்கை விசாரணை செய்த செஷன்ஸ் நீதிமன்றம், ரஸாலிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
தமக்கு எதிரான தற்காப்பு வாதத்தில், அவர் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தத் தவறி விட்டதாகக் கூறி நீதிபதி நோர்மா இஸ்மாயில் இத்தீர்ப்பை வழங்கினார்.
ரஸாலி இட்ரிஸ் தனது அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து ரஸாலி அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு, நவம்பர் 10-ஆம் தேதி, கெமாமான், பாடாங் அஸ்தாகா சுக்காயில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்த தேசத் துரோகக் கருத்துகளை வெளியிட்டதாக ரஸாலி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








