ஈப்போ, மார்ச்.06-
ஈப்போ, சிம்பாங் பூலாய், தாமான் பெர்சத்து பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையின் போது, ஓடிக் கொண்டிருந்த மூன்று கார்கள் மீது இரண்டு பெரிய மரங்கள் முறிந்து விழுந்ததில் ஆறு பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்.
மாலை 4:43 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இந்த விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்தது. அடுத்த 4 நிமிடங்களில் சிம்பாங் பூலாய் தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
புரோட்டான் சாகா, புரோட்டான் பெர்சோனா மற்றும் வோக்ஸ்வேகன் ஆகிய மூன்று கார்கள் மீது மரங்கள் விழுந்து பலத்த சேதமடைந்தன. தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே, அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் காருக்குள் சிக்கியிருந்த ஆறு பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
புரோட்டான் பெர்சோனாவில் பயணம் செய்த நான்கு பேரும், மற்ற இரண்டு கார்களின் ஓட்டுநர்கள் என மொத்தம் 6 பேரும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக இருப்பதாக பேராக் மாநில தீயணைப்புத் துறை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.








