தொடர்பு அமைச்சின் கீழ் உள்ள துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகமான இப்தார் (IPPTAR) ஏற்பாடு செய்த “ஊடகத்தின் வாயிலாக தோற்றம் மற்றும் நற்பெயர் மேலாண்மை” எனும் மூன்று நாள் பயிற்சி வகுப்பு பினாங்கு, பேவியூ ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தகவல் அதிகாரி சசிதரன் லோகநாதன் ஒருங்கிணைப்பிலான இந்தப் பயிற்சி வகுப்பு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி, இன்று ஏப்ரல் 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.
பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தகவல் அதிகாரி சசிதரன் விவரிக்கையில், " இப்தார் (IPPTAR) தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் மொழி சார்ந்த அதிகாரிகளுக்காக இந்த 3 நாள் சிறப்புப் பயிற்சி வகுப்பை முன்னெடுத்துள்ளது. இதில் ஊடகத் துறை மற்றும் இதர துறைகளைச் சார்ந்த மொத்தம் 24 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் கோலாலம்பூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் இத்தகைய பயிற்சிகளை நாங்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக, தற்போது பினாங்கில் இந்த வகுப்பு நடைபெறுகிறது. இரண்டாம் நாள் பயிற்சியின் போது கோலாலம்பூரில் பெறப்பட்ட அனுபவங்களையும் நுட்பங்களையும் கொண்டு பயனுள்ள அமர்வுகள் நடத்தப்பட்டன.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், பங்கேற்பாளர்கள் ஊடகங்களின் வாயிலாக தங்களின் தனிப்பட்ட தோற்றத்தையும், தாங்கள் சார்ந்த அமைப்பின் நற்பெயரையும் எவ்வாறு திறம்பட நிர்வகிக்க வேண்டும் என்பதில் தெளிவான புரிதலை ஏற்படுத்துவதாகும்," என்று சசிதரன் விவரித்தார்.
"தொடர்ந்து இப்பயிற்சி குறித்து பங்கேற்பாளர்கள் கருத்து தெரிவிக்கையில், ஊடகத்துறையில் தாங்கள் இதுவரை அறிந்திராத பல நுணுக்கமான விஷயங்களை இந்தப் பயிற்சிப் பட்டறை தங்களுக்குக் கற்றுக்கொடுத்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். குறிப்பாக, தனிநபர் தோற்றம் மற்றும் நிறுவன நற்பெயர் மேலாண்மை குறித்த புதிய பார்வையை இந்தப் பயிலரங்கம் வழங்கியதாக அவர்கள் விவரித்தனர்.
"பங்கேற்பாளர்களின் கருத்துகளில் இருந்து, இந்த மூன்று நாள் பயிற்சிப் பட்டறை அவர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்த எவ்வளவு பயனுள்ளதாக அமைந்தது என்பதை அறிய முடிகிறது. ஊடகத் துறையில் தோற்றம் மற்றும் நற்பெயர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இத்தகைய முன்னெடுப்புகள், தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆளுமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.














