தங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, ஏஜெண்டுகள் ஏமாற்றி விட்டதாக போலீசிஸ் புகார் செய்ய வந்த 171 வங்காளதேசிகள் கைது செய்யப்பட்டது தொடர்பில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் அந்த ஏஜென்சி குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சுங்கை பூலோ முன்னாள் எம்.பி. ஆர். சிவராசா கேட்டுக்கொண்டார்.
171 வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட ஏஜென்சியினால் வேலை பெற்று கொடுக்க இயலாது என்ற நிலை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மலேசியாவில் வேலை இருப்பதாக கூறி, வரவழைக்கப்பட்ட அந்த அந்நியத் தொழிலாளர்களின் வருகையை மலேசிய குடிநுழைவு இலாகா எவ்வாறு அங்கீகரித்துள்ளது என்று பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவராக சிவராசா கேள்வி எழுப்பினார்.
மலேசியாவில் வேலைக்கு தருவிக்கப்படும் அந்நியத் தொழிலாளர்கள், எந்த இடத்தில் வேலை செய்யப் போகிாறர்கள், யாரிடம் வேலை செய்யப் போகிறார்கள், எவ்வளவு காலத்தில் வேலை செய்யப் போகிறார்கள், முதலியவற்றை விலாவாரியாக ஆராயும் மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகள், இந்த 171 வங்காளதேசத் தொழிலாளர்கள் எங்கே வேலை செய்யப் போகிறார்கள் என்பதை துல்லியாமாக அறியாமல் அவர்கள் எவ்வாறு நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்று சிவராசா வினவினார்.
இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்து இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் இது குறித்து எஸ்பிஆர்எம் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று சிவராசா கேட்டுக்கொண்டார்.








