சிரம்பானில் 2023 ஆம் ஆண்டுக்கான தீபாவளி சந்தையை பழைய இடத்திலேயே நடத்துவதற்கு நெகிரிசெம்பிலான் மாநில அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 15 ஆண்டு காலமாக தீபாவளி சந்தை நடத்தப்பட்ட இடமான சிரம்பான், ஜாலான் டத்தோ லீ ஃபோங் யீ என்ற இடத்திலேயே தீபாவளி சந்தை நடத்தப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோ செரி அமினுதீன் ஹாருன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிரம்பான் மாநகர் மன்றத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டுள்து. தீபாவளி சந்தையை பழைய இடத்திலும் நடத்தலாம். சிரம்பான், தாமான் எ.எஸ்.தி யிலும் நடத்தலாம். எந்த பிரச்னையும் இல்லை என்று மந்திரி பெசார் செரி அமினுதீன் ஹாருன் குறிப்பிட்டார்.
வர்த்தகர்கள் யாரும் வியாபாரம் செய்வதை தடுக்கவில்லை. இதற்கு பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் தமக்கு அளித்த தகவலின் படி பழைய இடம் பொருட்களை வைப்பதற்கு போதுமான இட வசதியை கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் விளக்கினார்.
அதேவேளையில் புதிய இடமான தாமான் எ.எஸ்.தி யில் நடத்தப்படுமானால் அவ்விடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகளுடன் போதுமான இட வசதியுடன் வியாபாரம் செய்ய முடியும் என்று அமினுதீன் ஹாருன் குறிப்பிட்டார்.
சிரம்பானில் இன்று 2023 /2024 ஆம் ஆண்டுக்கான நெகிரி செம்பிலான் மாநில கிராம மேம்பாட்டு மற்றும் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்குழுவின் இடம் பெற்றவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.








