ஷா ஆலாம், அக்டோபர்.06-
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கணவர் உயிரிழந்த வேளையில் மனைவி மற்றும் கைக்குழந்தை உட்பட மூன்று பிள்ளைகள் படுகாயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.20 மணியளவில் ஷா ஆலாம், செக்ஷன் 22, பெர்சியாரான் தெங்கு அம்புவானில் நிகழ்ந்தது.
புரோட்டோன் சாகா FLX சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கிய 39 வயது நபர், கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்பு, மீட்புப் படை இலாகாவின் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
அந்நபரின் 38 வயது மனைவி மற்றும் அவரின் மூன்று பிள்ளைகளான 7 மாதக் கைக்குழந்தை, 7,4 வயதுடைய இரு சிறார்கள் கடுமையாகக் காயமுற்று ஷா ஆலாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








