Sep 30, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் ஐஜிபி-க்கு எதிரான அவதூறு வழக்கு: அமைச்சர் ஹன்னா இயோ வெற்றி! – 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முன்னாள் ஐஜிபி-க்கு எதிரான அவதூறு வழக்கு: அமைச்சர் ஹன்னா இயோ வெற்றி! – 2  லட்சத்து 50 ஆயிரம்  ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர், ஜனவரி.13-

முன்னாள் போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ மூசா ஹசானுக்கு எதிராக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹான்னா இயோ தொடுத்திருந்த அவதூறு வழக்கில், அந்த ஜசெக தலைவர் இன்று வெற்றிப் பெற்றுள்ளார்.

அமைச்சர் ஹான்னா இயோவிற்கு இழப்பீடாக முன்னாள் போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரி முசா ஹசான், 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய டான் ஶ்ரீ மூசா ஹசான், ஹன்னா இயோ எழுதிய 'Becoming Hannah' என்ற புத்தகத்தைப் பற்றி குறிப்பிடுகையில், அவர் மலேசியாவை ஒரு கிறிஸ்துவ நாடாக மாற்ற முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி ஹன்னா இயோ, முன்னாள் ஐஜிபி. க்கு எதிராக இந்த அவதூறு வழக்கைத் தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அஸிமா ஓமார், டான் ஶ்ரீ மூசா ஹசானின் கருத்துக்கள் அவதூறானவை என்றும், அவை ஹன்னா இயோவை மத ரீதியிலான தீவிரப் போக்கு கொண்டவராகச் சித்தரிக்கும் வகையில் அமைந்திருந்தன என்றும் தமது தீர்ப்பில் உறுதிப்படுத்தினார்.

மூசா ஹசான் தனது உரையில், ஹன்னா இயோ நாட்டை ஒரு கிறிஸ்துவ தேசமாக மாற்றப் பார்க்கிறார் என்று கூறியதற்கு எந்தவொரு வலுவான ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

ஹன்னா இயோவின் 'Becoming Hannah' புத்தகம் ஒரு சுயசரிதை மட்டுமே. அதில் நாட்டின் மதக் கொள்கையை மாற்றும் நோக்கம் எதுவும் இல்லை என்பதை நீதிபதி உறுதிச் செய்தார்.

முன்னாள் ஐஜிபி என்ற உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர், பொதுவெளியில் பேசும் போது கூடுதல் பொறுப்புணர்வுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர் உள்நோக்கத்துடன் ஹன்னா இயோவின் நற்பெயருக்குக் கெடுதல் விளைவிக்கும் வகையில் பேசியதாக நீதிபதி கூறினார்.

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், அரசியல் காரணங்களுக்காக மத ரீதியான உணர்வுகளைத் தூண்டி விடுவது ஆரோக்கியமற்றது என்றும், அத்தகைய பேச்சுக்கள் ஒரு மக்கள் பிரதிநிதியின் பொதுப்பணியைப் பாதிக்கும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

இழப்பீட்டுக்கு அப்பாற்பட்ட நிலையில் மூசா ஹசான் தனது கருத்துக்களுக்காக ஹான்னா இயோவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னைப் பற்றி பரப்பப்பட்ட பொய் பிரச்சாரங்களுக்குக் கிடைத்த வெற்றியாக வழக்கின் தீர்ப்பை பார்ப்பதாக ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →