ஜோகூர் பாரு, டிசம்பர்.28-
ஜோகூர் புக்கிட் கெப்போங் பகுதியில் இன்று காலை 8.55 மணிக்குத் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பும் அச்சமும் தொற்றிக் கொண்டது. ரிக்டர் அளவில் 3.4 ஆகப் பதிவு செய்யப்பட்ட இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என்பதோடு, நிலைமை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளதாக ஜோகூர் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி அறிவித்துள்ளார்.
நிலவரத்தை அரசும் பாதுகாப்பு அமைப்புகளும் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருவதால், பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சம் கொள்ளாமல் அமைதி காக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செகாமட், பத்து பகாட் உள்ளிட்ட பகுதிகளில் ரிக்டர் அளவில் 2.5 முதல் 4.1 வரை அடுத்தடுத்து பல நில அதிர்வுகள் பதிவாகி இருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பற்றக் கட்டடங்களை விட்டு விலகி இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வித அசம்பாவிதங்களையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.








