ஷா ஆலாம், ஆகஸ்ட்.27-
ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பலாப்ஸ் ( Palapes) பயிற்சியாளர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் மரண விவகாரம் தொடர்பில் அவரின் சடலம் வரும் வெள்ளிக்கிழமை தோண்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவனின் புலன் விசாரணையை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் நேரடியாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் 22 வயது மதிக்கத்தக்க அந்த பயிற்சி மாணவனின் உடலில் இரண்டாவது சவப் பரிசோதனை நடத்துவதற்கு ஏதுவாக அவரின் உடலைத் தோண்டி எடுப்பதற்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவுக்கு ஏற்ப வரும் வெள்ளிக்கிழமை தனது மகனின் உடல் தோண்டப்படும் என்று தங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த மாணவனின் தாயார் உம்மு ஹைமான் பீ டௌலாட்கன் இன்றிரவு தெரிவித்துள்ளார்.








