கோலாலம்பூர், ஜனவரி.18-
கோலாலம்பூர், ஜாலான் ஆலோர் பகுதியில் உரிமம் இன்றி வணிகம் செய்த ஒன்பது வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்களைக் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். பொது இடங்களில் இடையூறு விளைவிக்கும் வகையில் உணவு, பானங்கள், டுரியான் பழங்கள் ஆகியவற்றை விற்று வந்த இந்த வியாபாரிகளுக்கு எதிராக ஐந்து அபராதங்களும், பொதுப்பாதை ஆக்கிரமிப்புக்காக இரண்டு கூடுதல் நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன.
இந்தச் சோதனையின் போது வணிகத்திற்குப் பயன்படுத்தப்பட்டத் தள்ளுவண்டிகள், மேசைகள், நாற்காலிகள், குடைகள் போன்ற அனைத்துப் பொருட்களும் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுப் பாதுகாப்புக் கிடங்கிற்கு அனுப்பப்பட்டன. பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து இத்தகைய கண்காணிப்புப் பணிகளும் சட்ட நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என டிபிகேஎல் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.








