கோலத் திரங்கானு, ஜூலை.12-
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைப் போல பள்ளி ஒன்றின் வளாகத்தில் மதுபானம் ஏலம் விடப்பட்டச் சம்பவத்தை போலீசாரின் விசாரணைக்கே கல்வி அமைச்சு விட்டு விடுவதாக அதன் அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
பள்ளி வளாகம் சம்பந்தப்பட்ட விதிமீறல்கள் அல்லது தவறான நடத்தை தொடர்புடைய விவகாரத்தில் கல்வி அமைச்சு விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிக்காது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை செய்வதற்கு ஏதுவாக அமலாக்கத் தரப்பினரிடமே இந்த விவகாரத்தை ஒப்படைப்பதாக ஃபாட்லீனா சீடேக் விளக்கினார்.
ஜோகூர் பொந்தியான், பெக்கான் நெநாஸில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு நிதி திரட்டும் வகையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வருடாந்திர விருந்து நிகழ்ச்சியில் மதுபானம் ஏலம் விடப்பட்ட நிகழ்வு கைகலப்பாக மாறியது. இதன் தொடர்பில் போலீசார் 18 பேரைக் கைது செய்துள்ளனர்.
பள்ளி வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.








