கோலாலம்பூர், செப்டம்பர்.03
கோலாலம்பூர் மையப் பகுதியான புக்கிட் பிந்தாங், ஜாலான் பெடாராவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குடிநுழைவுத்துறையினர் நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது கிட்டத்தட்ட 800 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மூன்று வாரங்களாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகார்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில் இரவு 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த ஓப்ஸ் பெலாஞ்சா நடவடிக்கையில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறையின் அமலாக்கப் பிரிவின் இயக்குநர் பஸ்ரி ஒத்மான் தெரிவித்தார்.
இதில் வியக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், சிசிடிவி கண்காணிப்புக் கேமரா முழுமையாகப் பொருத்தப்பட்ட ஒரு ஆன்லைன் சூதாட்ட வளாகத்தையும் அமலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர் என்றார் அவர்.
அதிகாரிகள் அந்த வளாகத்தின் கதவை உடைத்த போது, ஏழு வெளிநாட்டினர், அமலாக்க அதிகாரிகள் சூழ்ந்து விட்டதை அறியாமல் ஆன்லைன் சூதாட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர் என்று சோதனை நடைபெற்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது பஸ்ரி ஒத்மான் இதனைத் தெரிவித்தார்.
106 அதிகாரிகளின் பலத்துடன் 2,445 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் 1,600 வெளிநாட்டினர் மற்றும் 845 உள்ளூர்வாசிகள் ஆவர்.
அடையாள ஆவணம் இல்லாத 770 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். 377 வங்காளதேச ஆடவர்கள், 235 மியான்மார் ஆடவர்கள், 72 நேபாள ஆடவர்கள், 58 இந்திய ஆடவர்கள், 17 இந்தோனேசிய ஆடவர்கள் மற்றும் இரண்டு பெண்கள் என மொத்தம் 770 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








