வியட்நாமை சேர்ந்த பாம் நஹத் வுயங் என்பவரின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 255% அதிகரித்துள்ள நிலையில், அவர் அந்நாட்டின் டாப் பணக்காரராக உருமாறியுள்ளார்.
இங்கு பொதுமக்கள் ஒவ்வொரு ரூபாயை சம்பாதிக்கவே பெரும் போராட்டமாக இருக்கிறது. ஆனால், பெரும் பணக்காரர்களுக்கு அப்படி இல்லை.. அவர்களால் பல கோடி ரூபாயை அசால்டாக சம்பாதிக்க முடிகிறது.
அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு இது வெளிப்படையாகவே தெரிகிறது. கொரோனாவுக்கு பிறகு ஏழைகள் மிகவும் ஏழைகளாக மாறி வருகிறார்கள். அதேநேரம் பணக்காரர்கள் மிக வேகமாக மேலும் மேலும் பணக்காரர்களாக மாறி வருகின்றனர்.
இதற்கிடையே வியட்நாம் நாட்டை சேர்ந்த மின்சார வாகன உற்பத்தியாளரின் பங்குகள் பட்டியலிட்ட முதல் நாளே 255% உயர்ந்துள்ளது. இதன் மூலம் பாம் நஹத் வுயங் என்ற அந்த பெரும் பணக்காரரின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 39 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 3.2 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. வியட்நாமை சேர்ந்த அந்த வின்பாஸ்ட் நிறுவனத்தின் மதிப்பு இப்போது ஜெனரல் மோட்டார்ஸ், பென்ஸ் நிறுவனங்களை விட அதிகமாகும்.
இப்போது 44.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் வியட்நாம் நாட்டின் மிகப் பெரிய பணக்காரராக நஹத் வுயங் உருவெடுத்துள்ளார். வின்பாஸ்ட் நிறுவனத்தின் பங்குகளில் சுமார் இப்போது 99% இப்போது நஹுத் வுயங்கிடம் தான் இருக்கிறது. அந்த பங்கின் மதிப்பு ஒரே நாளில் 255% மடங்கு அதிகரித்த நிலையில், அவரது சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது.
ரஷ்யாவில் பொறியியல் படித்த நஹுத் வுயங் 1990களில் உக்ரைனுக்கு சென்றார்.. இருப்பினும், அங்கிருந்து சில ஆண்டுகளில் அவர் மீண்டும் வியட்நாம் திரும்பினார்.. பின் 2010இல் நெஸ்லே நிறுவனம் விற்கும் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிலை அவர் தொடங்கினார்.
மேலும், அவர் ரியல் எஸ்டேட், ரிசார்ட்ஸ், பள்ளிகள், ஷாப்பிங் மால்கள் என பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். இதற்காக விங்ரூப் ஜே.எஸ்.சி என்ற நிறுவனத்தையும் அவர் தனது கைவசம் வைத்துள்ளார். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் $4.4 பில்லியன் வருமானத்தைப் பதிவு செய்தது..








