கோலாலம்பூர், ஆகஸ்ட்.27-
வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் டயாலிசிஸ் சிகிச்சைக்கான செலவு ஆண்டுக்குக் குறைந்தது 4 பில்லியன் ரிங்கிட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், மலேசியா கடுமையான சுகாதார நிதிச் சவால்களை எதிர்கொள்ளவிருக்கிறது என்று மேலவை உறுப்பினர் செனட்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று 13 ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் லிங்கேஸ்வரன், டயாலிசிஸ் சிகிச்சையை மட்டுமே நம்பியிருப்பது நீண்ட காலத்திற்கு நிலையானது அல்ல என்றும் இது நாட்டின் சுகாதார நிதி ஒதுக்கீட்டைப் பாதிக்கலாம் என்றும் வலியுறுத்தினார்.
2016 ஆம் ஆண்டில், மலேசியா, இறுதி நிலை சிறுநீரக நோயாளிகளுக்கு 1.65 பில்லியன் ரிங்கிட்டைச் செலவிட்டுள்ளது. இந்த நிதியில் 94 விழுக்காடு அல்லது 1.55 பில்லியன் ரிங்கிட் டயாலிசிஸுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று டாக்டர் லிங்கேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.
மிகக் குறைந்த செலவாகவும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வகை செய்யும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆறு விழுக்காடு தொகை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
டயாலிசிஸ் தேவைப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது ஒவ்வோர் ஆண்டும் 9,000 முதல் 10,000 வரை எட்டுகிறது. வெளிப்படையாக, ஆண்டுக்கு சுமார் எட்டு முதல் ஒன்பது விழுக்காடு மருத்துவ பணவீக்கத்துடன் சேர்ந்து, சிகிச்சைக்கான செலவு நாட்டின் சுகாதார பட்ஜெட்டின் வளர்ச்சியை விட வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டாக்டர் லிங்கேஸ்வரன் அச்சம் தெரிவித்தார்.








