பண்டார் துன் ரஸாக் நாடாளுமன்றத் தொகுதியில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, 2025-ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை பிரதமரின் சிறப்பு ஒதுக்கீடாக 5.7 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பெருமாஹான் அவாம் ஶ்ரீ கோத்தா பகுதியில் நேற்று நடைபெற்ற 2026 மடானி கீத்தா நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த நிதியின் மூலம் பள்ளிகள், பள்ளிவாசல்கள், சூராவ்கள் மற்றும் சமூக மண்டபங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், புதுப்பிக்கப்பட்ட வசதிகளைப் பராமரிப்பது கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல்லின் பொறுப்பு மட்டுமல்ல எனக் குறிப்பிட்ட அவர், அவற்றைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்நிகழ்ச்சியில் 20 இகாசே மோட்டார் சைக்கிள்களும், 300 ரஹ்மா கூடைகளும் மக்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும், அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைவதுடன், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இத்தகைய நிகழ்ச்சிகளின் உண்மையான வெற்றி என்றும் வான் அஸிஸா தெரிவித்துள்ளார்.








