மலேசியாவில் வருமான வரி நிலுவை, நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசாங்க அமலாக்க அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டிய தொகைகளைச் செலுத்தாதது உள்ளிட்ட காரணங்களால் 4 லட்சத்து 4 ஆயிரத்து 848 பேருக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
இதில், உள்நாட்டு வருவாய் வாரியமான எல்எச்டிஎன்னுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவை, சுங்கத்துறைக்குச் செலுத்த வேண்டிய தொகைகள், ஊழியர் சேமநிதி வாரியத்தின் இபிஎஃப் நிலுவைப் பங்களிப்புகள் மற்றும் பிற சட்டப்பூர்வக் கடமைகளை நிறைவேற்றாதவர்களும் அடங்குவர் என நேர்காணல் ஒன்றில் ஸாகாரியா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்பவர்கள், திவால் தொடர்பான வழக்குகளில் சிக்கியவர்கள், தேசிய உயர்கல்விக் கடன் நிதியமான பிடிபிடிஎன்னுக்குச் செலுத்த வேண்டிய கடன் நிலுவை வைத்திருப்பவர்கள் மற்றும் இதர அமலாக்க அமைப்புகளால் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.








