கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-
இலக்கவியல் அமைச்சின் குறிக்கோள்களை வலுப்படுத்த இலக்கவியல் அமைச்சு சகாக்கள் நியமனக் கடிதங்களை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வழங்கினார். இன்று வருகை தந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலக்கவியல் அமைச்சின் சார்பாக, இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வீ காசி யோங், புக்கிட் பெண்டேரே நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா அப்துல் ரஷீட் என பலர் கலந்து கொண்டனர்.

இலக்கவியல் செயற்கை நுண்ணறிவுத் துறை நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான சரியான தகவல்கள், முறையாகவும், விரைவாகவும், புரியும் வகையிலும், மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் கடப்பாட்டை இலக்கவியல் அமைச்சு கொண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், இந்த முயற்சி, அரசாங்கத்தின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் கழகத்தின் ஒரு திட்டமாகும். இது பிப்ரவரி 21, 2025 அன்று அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

இது இலக்கவியல் அமைச்சின் சகாக்களை வலுப்படுத்துவதோடு, அமைச்சுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் பாலமாகச் செயல்படுகிறது. இதன் வழி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலக்கவியல் அமைச்சின் கொள்கைகளையும், மக்களுக்கு வகுக்கும் திட்டங்களையும் அறிந்து தெளிந்து, கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் இயலும் என்று கோபிந்த் சிங் தெரிவித்தார்.








