Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலய கண்திறப்பு விழா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலய கண்திறப்பு விழா

சிரம்பான், நவ.25-


சிரம்பான், தாமான் துவான்கு ஜப்பாரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் அண்ணாமலையார் பாதம் மற்றும் அர்த்தனாதிஸ்வரர் பெருமான் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கான திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் ஆலய வருடாபிஷேக பெருவிழா நாளை மறுநாள் நவம்பர் 27 ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு அதன் ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் தற்போது முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

காலை 10.04 மணி முதல் 11.04 மணி வரை நடைபெறும் திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு இன்று காலையில் சிறப்பு பூஜைகளுடன் சிலைகளுக்கு கண் திறப்பு விழா நடைபெற்றது. பெரிய நாயகி அம்மன், முனீஸ்வரர், சந்திரன் சூரியன், அதிகார நந்தி, நவகிரகங்கள் மற்றும் சிரம்பானிலேயே மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை ஆகியவற்றுக்கு கண் திறப்பு நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.

நாதஸ்வரம், மேளதாளம் முழங்க, தமிழ்வேதம் ஓத தமிழகம், மகாபலிபுரத்தைச் சேர்ந்த சிற்பியின் துணையுடன் சிலைகளுக்கு கண்கள் திறக்கப்பட்டன. அத்துடன் கலச ஸ்தாபனமும் நடைபெற்றது. வைபவத்தின் உச்சமாக கருடன் வானில் வலம் வந்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

ஆலய நிர்வாகத்தினரின் முன்னிலையில் ஆலயத்தின் பிரதான குருக்கள் சிவஸ்ரீ அ. புவிதர்ஷன் குருக்கள் தலைமையில் இவ்வைபவம் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு மேல் முதலாம் வேள்வி வழிபாடு மற்றும் பன்னிரு திருமுறை முற்றோதலுக்கு முன்னதாக பிம்ப ஸ்தாபனம் மற்றும் யந்திர ஸ்தாபனம் நடைபெற்றது.

நாளை செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் பங்கு கொள்ளும் தெய்வசிலைகளுக்கு எண்ணெய் சாற்றுதல் வைபவம் நடைபெறவிருக்கிறது.

இக்குட முழக்கு பெருவிழாவும், வருடாபிஷேக பெருவிழாவும், சிறப்பு பூஜைகளும் திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்ர தேசிக சுவாமிகளின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்படி நடத்தப்படுவதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →